வருத்தம் தெரிவித்த தளவாய் சுந்தரம்! மீண்டும் பொறுப்பு வழங்கிய அதிமுக
அதிமுக அமைப்புச் செயலாளராகவும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமாக பதவி வகித்து வந்தவர் தளவாய் சுந்தரம். இவர் கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமாக செயல்படவில்லை என்று புகார் எழுந்தது. இந்த சூழலில், விஜயதசமியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்திமங்கலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. இதனை அந்தப் பகுதியில் தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கிவைத்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
அந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தளவாய் சுந்தரத்தை கட்சிப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கட்சி கொள்கை - குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தளவாய் சுந்தரத்தை கட்சி பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக விடுவிப்பதாக” அறிவித்து, அவர் தற்காலிகமாக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (18-ம் தேதி) மீண்டும் அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு, 8.10.2024 அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
தளவாய்சுந்தரம், அந்நிகழ்வில் கலந்துகொண்டது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.